பெளர்ணமி இரவொன்று
பாலைவனச் சகாராவாகியதால்
என் மெளனத்தின் அலறல்கள்
இப்போதும்
எனக்குள்ளே
உதிராத ஞாபகங்களாய்...
என்னை நானே
ஆசுவாசப்படுதினாலும்
மனம் அங்கலாய்த்து
அவதிப்பட்டுக் கொள்ள
அன்றைய நிகழ்வின்
நினைவு மணி
இழுக்கப் பட்டதும்
என் மனசு
இப்போதும் இடறி விழுகிறது.
அன்று
பூரண பெளர்ணமி தினம்
உன் தரிசனத்திற்காய்
என் காத்திருப்பு!
விருட்சமாய்
மனதில் வேர் விட்டு
விழுது பரப்பிய சந்தோசம்
எனக்குள்...
எந்தத் தொலை தூரமாயினும்
எப்போதுமே நீ
என்னுள் நிறைந்திருப்பதனால்
பனி படரும் இரவினிலும்
உன்னை
ஓர் முறை தரிசித்து விட
நானும் காத்துத் தவமிருந்தேன்.
நான் உன்னை
பார்க்கும் போதெல்லாம்
கார் முகில் திரை கொண்டு
உன்னை நீ
மறைத்துக் கொண்டாய்.
என் விழிகளில் மட்டும்
விழுந்திடாமல்
திட்டமிட்டு
நீயும் ஒளிந்துக் கொண்டதை
அறிந்த போது
நானும் தவித்துப் போனேன்.
உன் தரிசனத்திற்காய்
தவமிருந்த
என் இதயப் பூங்காவை
அறுவடை செய்ய நினைத்தது
எந்த வகையில் நியாயம்...?
என் மனதை எப்போதும்
குளிர்மையாக்கிய நீ
அன்று
எதற்காக முட் பூக்களை
தூவிச் சென்றாய்...?
என் இதய வலி
இன்னுமே தீராத நிலையில்
ஓராயிரம் வலிகளாய்
உள்ளிருந்து வலிக்க...
வேதனைப் பனி மூட்டங்களின்
முகங்களை மறைத்து
சுமைகளையும் சோகங்களையும்
எவருமே அறிந்திடாமல்
உள்ளம் என்னும் புதைகுழிக்குள்
புதைத்துக் கொள்கின்றேன்.
என்
இதயத்தின் உள்ளே
தழும்பாகிப் போன இந்த வலி
எப்போதுமே எனக்கு
ஒரு திருப்பமாகவே
இருந்து விட்டுப் போகட்டும்!
சத்தியா
(படித்ததில் பிடித்தது)
(படித்ததில் பிடித்தது)
0 comments:
Post a Comment