Tuesday, May 31, 2011

Share

உறவாக....

 உண்மை உறவுகள்
உலகத்தில் எத்தனை
உள்ளம் அறியாமல்
உருகுதே நெஞ்சம்

கருவினிலே எனை தாங்கி
உதிரத்தை எனதாக்கியவள்
உறவாடி மகிழ முன்னே
உலகத்தை நீந்து விட்டாள்

மடி தந்து பசியாற்றி
பாசத்தை பகிர்ந்திட்ட
வாழ்வின் வழிகாட்டி - பாதி
வாழியினிலே ஏனோ தவிக்க விட்டு
தாயிடம் தானும் சென்றதினால்...

பள்ளித் தோழமையால்
பசுமைதனை உணர்கையில்
பருவகாலம் முடிந்தமையால்
பல திசையில் பறந்து சென்றோர்
பாசத்திலும் வறுமை..

தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....

Friday, May 27, 2011

Share

குட்டிக்கவிதை..!

நினைவுகள்
தித்திக்கும் உன் நினைவுகள்-என்னை
தீண்டிடும் தென்றலாய் எந்நாளும்....!

**************************************
தேயாநிலவாய்
துள்ளிவரும் புள்ளிமானாய்
தூயவளே உன்னை கண்டேன்
தெய்வம் தந்தவரமடி எனக்கு
தேயாநிலவாய் என் வாழ்வில் நீயடி..!

**************************************
இரு உள்ளம்
சாதி மதபேதத்தால் 
தனித்திங்கே இருஉள்ளம் 
தவிக்கின்றன தனித்தனியே..!!!

**************************************
பெண் நிலவு
வானம் பார்த்து நிலா ரசிக்கையில்
என்னருகில் இன்னொரு நிலவு.!
*************************************
தரையினிலே
“உயரத்திலே வான்மேகம் 
அதன்நடுவே வெள்ளிநிலா”
வானம் நானடி
வெள்ளிநிலா நீயடி..!

Wednesday, May 25, 2011

Share

இன்பமும் துன்பமும்

எண்ணங்களெல்லாம் - ஏன்
எம்முள்ளே உருவாகின
எம்மை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
அவை தினம் தினம்...

ஏக்கங்களுக்குள்ளே
தாக்கு பிடிக்காது
சிக்கித் தவிக்கும்
மனம் இதற்காய்
எல்லையை உருவாக்க
எண்ணங்களை முந்தியே
விரைதிட்ட போதிலும்
அங்கேயும் முடியவில்லை

ஒருவித ஊக்கம்
உள்ளுக்குள் உத்வேகம்
சிற்சில மாற்றம்
சில நேரம் தயக்கம்
சொற்ப நேரத்தில்
செயலுடன் இணைந்தே
சிந்தையும் பயணிக்குது

முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்

எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்

-தோழி பிரஷா-

Sunday, May 22, 2011

Share

ஆயுள் கைதி


உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக 
இன்று நானிங்கு..

Thursday, May 19, 2011

Share

டயரியில்.

 தண்ணீரில் தாமரைபோல்
கண்ணீரில் நானின்று...!
 உறவுகள் பல உண்டு 
போலியாய் உரிமை கூற...
பொறுப்புடன் எமைக்காக்க
எமைவிட்டால் வேறாரு இங்குண்டு?

உண்மை பாசமெங்குண்டு
ஊமையிவள் தேடுகின்றேன்
எங்குமே கிடைக்கவில்லை
ஏக்கத்துடன் வாழுகின்றேன்..!

தேடித்தேடி தொலைத்தேன்  பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!
என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.

Monday, May 16, 2011

Share

இசையின் திசையிலே....!

 இதமான பூங்காற்றுடன்
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள் - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?

ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே

வாழ்க்கை என்னும் பாடலில்
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....

Friday, May 13, 2011

Share

அவன் நினைவுகள்..

 பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..

அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது.

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே

தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன் - காரணம்
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்..... 

Sunday, May 8, 2011

Share

அன்னையே.....

 அகிலம் இதில் எம்
அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னையே

உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல
உமக்கு ஈடேதும்
தவிழும் வயதில்
தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் 
இமையாய் இருந்தாய்
துன்பம் எமை 
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை நீ மறந்தாய்

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னையே
அனுதினமும் வாழ்த்தி
வணங்குகின்றோம்......

Wednesday, May 4, 2011

Share

துரோகம்...

தொலைத்தூரத்தில் இருந்து
தொடர்ந்து வருவதில்லை
நெஞ்சுக்குள் இருந்தே
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.

பொழிந்திடும் அன்பினை
இழந்திடும் போதினிலும்
பொங்கிடும் ஆசைகள்
கரைபுரை ஓடிடும் போதிலும்
தஞ்சமே இன்றி மனம்
தவித்திடும் எண்ணத்தில் - தான்
நினைத்ததை நிறைவேற்ற
போராடும் வேளையில்
பிறர் முன் துரோகி...

நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..

புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே தினம்
இழப்புக்களோடு இகழ்ச்சியை
வளர்த்தே அதில்
தன்னை வளர்க்குது துரோகம்.